மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து டெல்லி, அரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும் சரி, காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி இணைந்தாலும் சரி ஜீரோ பிளஸ் ஜீரோ ஜீரோதான் என அமித் ஷா கேலி செய்துள்ளார்.
மேலும், "ஊழல் கட்சி என்று நீங்கள் கூறிய அதே காங்கிரஸ் கட்சியின் மடியில் அமர்ந்துள்ளீர்கள். காங்கிரஸ் கட்சி ஊழல் கட்சி என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்களால் கூட்டணி அமைக்க முடியும். ஆனால் பிரதமர் மோடி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார்.
டெல்லியில் இரண்டு விதமான அரசியல் செய்யும் நபர்கள் உள்ளனர். ஒரு நபர் தாங்கள் சொன்னதை செய்யும் வகையைச் சேர்ந்தவர். மற்றொருவர் அதற்கு எதிர்ப்பதமாக செய்யக் கூடியவர். இரண்டு விதமாக மக்கள் டெல்லியில் உள்ளனர். ஒருவர் நரேந்திர மோடி. மற்றொருவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். கெஜ்ரிவால் அவர் சொன்னது எதையும் செய்யவில்லை" என்றார்.
இதற்கு ஆம் ஆத்மி கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் எங்களை டெல்லி மாநில ஆட்சியில் அமர்த்தினர். அதேபோன்று இந்த முறை டெல்லியில் இருந்து பா.ஜனதா எம்.பி.க்களை வெளியேற்றி பாராளுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கையை உயர்த்துவார்கள் எனத் தெரிவித்துள்ளது.