Type Here to Get Search Results !

பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் சிஏஏ ஏற்கத்தக்கது அல்ல: விஜய்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருச்சச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல.

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்து, கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.

இதன்படி பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத அடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இம்மசோதா வகை செய்கிறது.

2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றது.

ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 6 மாதங்களுக்குள் சட்டத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டால்தான், அச்சட்டம் அமலுக்கு வரும். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

எனவே, விதிமுறைகள் வெளியிடப்படவில்லை. சட்டமும் அமல்படுத்தப்படவில்லை.

இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறினார். அதையடுத்து இதற்கான பணிகள் வேகம் எடுத்தன.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்துடன் அச்சட்டம் அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

3 நாடுகளில் இருந்து வந்த மேற்கண்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கும். இதற்கென பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

எவ்வித ஆவணமும் இல்லாமல், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு வந்தவர்கள் அதில் விண்ணப்பிக்க வேண்டும். எந்த ஆண்டு வந்தனர் என்பதை குறிப்பிட வேண்டும். அவர்களிடம் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.