மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிதின் கட்கரி. இவர் மத்திய மந்திரியாக உள்ளார். தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.
பா.ஜனதா முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் மூத்த தலைவர்கள் பலரது பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், நிதின் கட்கரி பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவர் அவமதிக்கப்படுகிறார் என மகாராஷ்டிர மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
இது தொடர்பாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, அவமதிக்கப்பட்டால் எங்களுடைய கூட்டணிக்கு வந்துவிடுங்கள் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், "நீங்கள் பா.ஜனதா கட்சியால் அவமதிக்கப்பட்டால் மகா விகாஷ் அகாதி (உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்) கூட்டணிக்கு வந்து விடுங்கள். இதை இரண்டு நாட்களுக்கு முன்னதாக நிதின் கட்காரியிடம் சொன்னேன். தற்போதும் சொல்கிறேன்.
உங்களுடைய வெற்றியை நாங்கள் உறுதி செய்வோம். நாங்கள் அரசு அமைத்த பிறகு எங்களது அரசாங்கத்தில் உங்களுக்கு மந்திரி பதவி வழங்குவோம். அது அதிகாரமிக்க பதவியாக இருக்கும்" என்றார்.
உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியிருந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் "தெருவில் நிற்கும் ஒருவர் மற்றொருவரை பார்த்து நான் உன்னை அமெரிக்க ஜனாதிபதியாக்குகிறேன் என்று சொல்வது போல் உள்ளது" என கிண்டல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.