Type Here to Get Search Results !

இந்தியா கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மாற்றி வாக்களித்ததால் பா.ஜனதாவுக்கு கூடுதலாக 2 இடங்கள்

இந்திய பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து 56 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. 41 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். உத்தர பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் போட்டி நிலவியதால் தேர்தல் நடத்தப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரே ஒரு இடத்திற்கு பாரதிய ஜனதாவும் காங்கிரசும் பலப்பரீட்சை நடத்தின. காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மொத்தமாக வாக்கு அளித்தால், அந்த கட்சியின் எம்.பி. வேட்பாளர் எளிதாக வெற்றி பெறுவார். ஆனால், எம்.எல்.ஏ.-க்கள் மாற்றி வாக்களித்ததால் பாரதிய ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் சிங்வி அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

உத்தர பிரதேசத்தில் பாரதிய ஜனதாவுக்கு ஏழு இடங்களிலும், சமாஜ்வாடி கட்சிக்கு மூன்று இடங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் பாரதிய ஜனதா எட்டு வேட்பாளர்களை நிறுத்தியதால் தேர்தல் நடைபெற்றது.

அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் கட்சி நிறுத்திய வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் பாரதிய ஜனதாவின் ஏழு வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். சமாஜ்வாடியின் 3 வேட்பாளர்களும் எளிதாக வெற்றி பெறுவார்கள்.

ஆனால் சமாஜ்வாடி கட்சியின் சில எம்.எல்.ஏ.-க்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்ததால் பாரதிய ஜனதாவின் எட்டு வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். மூன்று இடங்களில் வெற்றிபெற வேண்டிய சமாஜ்வாடி கட்சி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஒரு இடத்தை இழந்தது.

நான்கு இடங்களை கொண்ட கர்நாடகாவில் பாரதிய ஜனதா கூட்டணி மேலும் ஒரு வேட்பாளரை நிறுத்தியதால் போட்டி நிலவியது. காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களுக்கு ஒரே ஒரு வாக்கு மட்டும் தேவைப்பட்ட நிலையில் மூன்று பேரும் எளிதாக வெற்றி பெற்றனர். ஒரு பாரதிய எம்.எல்.ஏ. காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

பாரதிய ஜனதாவின் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், பாரதிய ஜனதா ஆதரவுடன்� மதசார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் நிறுத்திய வேட்பாளர் தோல்வியடைந்தார். காங்கிரசுக்கு மூன்று இடங்களும் பாரதிய ஜனதாவிற்கு ஒரு இடங்களும் கிடைத்தன.

ஒட்டு மொத்தமாக 15 இடங்களில் நடந்த தேர்தலில் பத்து இடங்களில் (உத்தர பிரதேசம்-8, இமாச்சல பிரசேதம்-1, கர்நாடகா-1) பாரதிய ஜனதாவும் மூன்று இடங்களில் (கர்நாடகா) காங்கிரசும், இரண்டு இடங்களில் சமாஜ்வாடி கட்சியும் வெற்றி பெற்றன. உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசத்தில் இருந்து பா.ஜனதா தலா ஒரு இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளது.

விரைவில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்தது, அந்த கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சோனியா காந்தி, ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.