உத்தர பிரதேச மாநிலத்தில் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராம்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். அப்போது தேர்தல் விதியை மீறியதாக அவர் மீது கெமாரி, சுவார் போலீஸ் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் ராம்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு தொடர்பாக அவருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் கோர்ட்டில் நடிகை ஜெயப்பிரதா ஆஜர் ஆகவில்லை. இதனால் அவரை தலைமறைவு குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் ஜெயப்பிதாவை கைது செய்து வருகிற 6-ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நடிகை ஜெயப்பிரதா கடந்த 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் அதே தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.