உத்தர பிரதேசத்தில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருந்தார். இவருடைய பதவி காலத்தில் சுரங்கங்களை குத்தகைக்கு விடுவதில் பெரும் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பொதுப்பணித்துறையினர் சட்ட விரோதமாக சுரங்கத்தை அனுமதித்ததாகவும், சுரங்கம் தோண்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருந்த போதும் சட்ட விரோதமாக உரிமங்களை புதுப்பித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன.
இதை தொடர்ந்து, சுரங்க முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன் பேரில் 2016-ம் ஆண்டு ஆரம்ப விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த சி.பி.ஐ., 2012-2013 வரையிலான காலக் கட்டத்தில் மாநில சுரங்கத்துறையை அகிலேஷ் யாதவ் கவனித்து வந்தபோது இந்த முறைகேடு நடந்ததாகவும், ஒரே நாளில் 13 சுரங்க குத்தகைகளுக்கு முதல்-மந்திரி அலுவலகம் அனுமதி அளித்ததாகவும் குற்றம் சாட்டியது.
அதனை தொடர்ந்து சுரங்க முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரகலா, சமாஜ்வாடி கட்சியின் எம்.எல்.சி. ரமேஷ் குமார் மிஸ்ரா உள்ளிட்ட 11 பேர் மீது சி.பி.ஐ. கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு, சுரங்க முறைகேடு தொடர்பான வழக்கில் சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
வழக்கு தொடர்பான விசாரணைக்கு அகிலேஷ் யாதவ் இன்று நேரில் ஆஜராக வேண்டுமென அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தவறாக பயன்படுத்தி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கில் அகிலேஷ் யாதவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.