தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார்.
மறைந்த விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கிறது. இன்று (டிசம்பர் 29) அதிகாலை விஜயகாந்த் உடல் தீவுத்திடலுக்கு எடுத்து செல்லப்பட உள்ளது. பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஏதுவாக மதியம் 1 மணி வரை விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.
பிறகு, மதியம் 1 மணிக்கு விஜயகாந்த்-இன் இறுதி ஊர்வலம் துவங்க உள்ளது. தீவுத்திடலில் இருந்து விஜயகாந்த் உடல் மீண்டும் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. தே.மு.தி.த. அலுவலகத்தில் மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளதை அடுத்து, அங்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஏற்பாடு பணிகளை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். விஜயகாந்த்-க்கு மத்திய அரசு சார்பில் மரியாதை செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.