Type Here to Get Search Results !

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மகள் உயிரோடு இருக்கிறாரா?

பிரபாகரன் மகள் துவாரகா என்று வர்ணிக்கப்படும் உதயகலாவை காணலாம்.

பிரபாகரன் மகள் துவாரகா என்று வர்ணிக்கப்படும் உதயகலாவை காணலாம்.

சென்னை:

தமிழீழம் கோரி இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு அந்நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த போரில் பிரபாகரனின் மனைவி மதிவதனி, 2 மகன்கள், மகள் துவாரகா ஆகியோரும் உயிரிழந்து விட்டனர் என்று இலங்கை ராணுவம் அறிவித்தது.

ஆனால் டென்மார்க் நாட்டில் வசிக்கும் தாரகா ஹரித்தரன் என்ற பெண், தன்னை பிரபாகரனின் மனைவி மதிவதனியின் சகோதரி என்று கூறி 'வீடியோ' ஒன்றை வெளியிட்டார். அதில் மதிவதனியும், பிரபாகரனின் மகள் துவாரகாவும் இறக்கவில்லை. உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

'பிரபாகரனும் உயிருடன் இருக்கிறார்' என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த தகவலை இலங்கை நாட்டு ராணுவம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள சமூக வலைத்தளங்களில் 'வீடியோ' காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், அந்த நாட்டில் சர்வ மக்கள் கட்சியை நடத்தி வரும் உதயகலா என்ற பெண்தான் பிரபாகரனின் மகள் துவாரகா என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

துவாரகா தனது பெயரை உதயகலா என்று மாற்றி தமிழ்நாட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், தற்போது அவர் மீண்டும் இலங்கைக்கு திரும்பி மக்கள் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இலங்கை தமிழர்கள் மத்தியில் விவாத பொருளாகவும் இருக்கிறது.

இதன் பின்னணி வருமாறு:-

இலங்கையில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது பலர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்தனர். அவர்கள் சென்னை, திருச்சி, ராமேசுவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் தங்கி இருந்த தயாபாராஜ், அவரது மனைவி உதயகலா ஆகியோர் ராமேசுவரம் மண்டபம் சிறப்பு முகாமில் தங்களது உறவினர்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்று கூறி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இதைத்தொடர்ந்து 2 பேரும் மண்டபம் சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பில் அவர்கள் இருந்து வந்தனர். இதில் தயாபாராஜ் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டவர் ஆவார்.

தற்போது வெளியாகி உள்ள உதயகலா 'வீடியோ' காட்சி மூலம்தான் அவர் மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி சென்றிருக்கும் தகவல் தமிழக போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. உதயகலா, அவரது கணவர் மற்றும் 3 குழந்தைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் அகதிகள் முகாமில் இருந்து தப்பி சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை நாட்டுக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

போருக்கு பின்னர் இலங்கை நாட்டில் அமைதி திரும்பியதால் இவர்களை அந்நாடு ஏற்றுக் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.