பாராளுமன்ற சிறப்புக் கூட்டம் வருகிற 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், சிறப்புக் கூட்டம் எதற்காக கூட்டப்படுகிறது என்பது குறித்து தெரிவிக்கவில்லை.
இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு கூட்டப்படிருக்கலாம், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த மசோதாவை தாக்கல் செய்வதற்காக கூட்டப்பட்டிருக்கலாம் என பேசப்பட்டது.
ஆனால், 18-ந்தேதி பாராளுமன்ற பழைய கட்டிடத்தில் கூட்டம் தொடங்கும். அதன்பின் 19-ந்தேதி பாராளுமன்ற புதிய கட்டிடத்தில், அவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற இருக்கும நிகழ்ச்சி நிரல் குறித்து மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
சம்விதன் சபாவில் இருந்து பாராளுமன்றத்தின் 75 ஆண்டு காலத்தின் சாதனைகள், அனுபவம், நினைவுகள், கற்றுக்கொண்டவை குறித்து விவாதம் 18-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தேர்வு, தபால் நிலையம் மசோதா, வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா, பத்திரிகை மற்றும் பத்திரிகை பதிவு மசோதா ஆகிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து ஆலோசனை கூட்டம், சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் எழுதுதல் போன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு தற்போது நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் ''இந்த நிகழ்ச்சி நிரலில் ஒன்றுமில்லை. குளிர்கால கூட்டத்தொடர் வரை காத்திருந்திருக்கலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.