Type Here to Get Search Results !

உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்தது சாந்திநிகேதன் - யுனெஸ்கோ அறிவிப்பு

ரியாத்:

மேற்கு வங்காளத்தின் பீர்பும் மாவட்டத்தில் சாந்திநிகேதன் அமைந்துள்ளது. கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் கடந்த 1901-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது சாந்திநிகேதன். உறைவிட பள்ளி, பழமையான இந்திய பாரம்பரியங்களை அடிப்படையாக கொண்ட கலைக்கான ஒரு மையம் ஆகவும் இது திகழ்கிறது.

1921-ம் ஆண்டு சாந்திநிகேதனில் உலக பல்கலைக்கழகம் ஒன்று நிறுவப்பட்டது. மனித இனத்திற்கான ஒற்றுமை அல்லது விஸ்வ பாரதியை அங்கீகரிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான சுற்றுலாவாசிகள் இப்பகுதிக்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இந்த கலாசார தலத்திற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைப்பதற்காக நீண்டகாலம் வரை இந்தியா போராடி வந்தது.

இந்நிலையில், யுனெஸ்கோவின் பாரம்பரிய கமிட்டி சார்பில் 45-வது கூட்டத்தொடர் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நேற்று நடந்தது. இதில், மேற்கு வங்காளத்தின் சாந்திநிகேதன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளது என அறிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக, யுனெஸ்கோ வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்தியாவின் சாந்திநிகேதன், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. வாழ்த்துகள் என தெரிவித்துள்ளது.

யுனெஸ்கோ பட்டியலில் சாந்திநிகேதன் இடம்பிடித்ததைக் கொண்டாடும் வகையில், விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் முழுதும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.