Type Here to Get Search Results !

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று நடக்கிறது

புதுடெல்லி:

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் திடீரென கர்நாடக அரசு தண்ணீரை நிறுத்தி விட்டது.

இரண்டாவது கட்டமாக 15 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட காவிரி ஒழுங்காற்று குழு காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். மேலும் அனைத்துக் கட்சி அவசர ஆலோசனைக் கூட்டமும் நடந்தது. இதில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இதற்கிடையே, ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்த பிறகும் கர்நாடகம் தண்ணீர் தர மறுப்பது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடுவதுதான் கடைசி முடிவு என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார். மேற்படி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வரும் 21-ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த விசாரணையின்போது காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைக்கு காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? என நீதிபதிகள் கேட்கக்கூடும் என்பதால், அதுகுறித்து விவாதித்து முடிவு எடுப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் அவசரமாக கூட இருக்கிறது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணைய அவசர கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இது காணொலி வாயிலாக நடைபெறும் என கூறப்படுகிறது.

இதில் தமிழ்நாடு அரசுசார்பில் பங்கேற்கும் அதிகாரிகள் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட போராடுவார்கள். தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் இன்று நடைபெறுவதால் அதில் தமிழகத்தின் நிலை குறித்து அதிகாரிகள் எடுத்துக் கூறுவார்கள். அதன்பேரில், காவிரி மேலாண்மை ஆணையம் நியாயமான உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.