பாட்னா:
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், சுதந்திர தினத்தையொட்டி பாட்னாவில் உள்ள தனது வீட்டில் நேற்று தேசியக் கொடி ஏற்றினார். அவரது மனைவி ராப்ரி தேவி உடன் இருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத், இந்த சுதந்திர தினத்தில் நான் நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மவுலானா அபுல் கலாம் ஆசாத், அம்பேத்கர் போன்ற மாமனிதர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். தேசத்துக்கு அவர்கள் ஆற்றிய பங்கை மறக்க முடியாது என்றார்.
அவரிடம், அடுத்த சுதந்திர தினம், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு வரும் என்பதால் அடுத்த ஆண்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவாரா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு லாலு பிரசாத், இல்லை... பிரதமர் மோடி இந்த தடவை கடைசி முறையாக செங்கோட்டையில் கொடி ஏற்றியுள்ளார். அடுத்த முறை நாங்கள்தான் (எதிர்க்கட்சிகள்) அங்கு கொடி ஏற்றுவோம் என தெரிவித்தார்.