பெங்களூரு:
டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தார், 'சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும். தினமும் வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும்' என உத்தரவிட்டார்.
இதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்ததால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசு வெளியேறியது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறுகையில், 'தமிழகத்துக்கு நீர் திறப்பது தொடர்பாக காவிரி நீர்ப்பாசன கழக நிபுணர்கள், சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவெடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
இதையடுத்து காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தினமும் தண்ணீர் திறந்துவிடும்படியும், வினாடிக்கு 24,000 கன அடி நீர் திறக்கவும், செப்டம்பர் மாதம் தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய 36.76 டிஎம்சி தண்ணீரையும் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் இன்று காலை காங்கிரஸ் அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றினார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. கடந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகமாக இருந்ததாகவும், சுமார் 400 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. மேகதாது அணை இருந்திருந்தால் தமிழகம் எதிர்பார்க்கும் தண்ணீரை திறந்து விட்டிருக்க முடியும். எனவே மேகதாது அணை திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.