கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை தொடர்பான சட்ட மசோதா பிரான்ஸ் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால் கருக்கலைப்பு செய்ய இனிமேல் சட்டப்பூர்வ அனுமதி பெறத் தேவையில்லை. பெரும்பாலான நாடுகள் கருக்கலைப்பிற்கு எதிராக இருந்து வரும் நிலையில், கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை என அறிவித்த முதல் நாடு என்ற பெயரை பிரான்ஸ் பெற்றுள்ளது.
இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 780 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகின. ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் சட்டத்தை நிறைவேற தேவை என்ற நிலையில் அமோக பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேறியது.
இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் வெளியிட்டுள்ள செய்தியில் "நாங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தியை சொல்கிறோம். உங்களுடைய உடல் உங்களுக்கானதாக நம்பப்படுகிறது. உங்களுக்காக யாரும் முடிவு செய்ய முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்புக்கு ஆதரவானோர் இந்த செய்தியை கேட்டு பிரான்ஸ் ஈபிள் டவர் முன் குவிந்து தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் "என்னுடைய உடல் என்னுடைய தேர்வு" என்பதை வெளிப்படுத்தினர். மேலும் இந்த வாசகம் ஈபிள் டவரில் மின்விளக்கால் ஜொலித்தது.
பிரான்ஸ் நாட்டில் 1974-ம் ஆண்டு பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்வதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிக அளவில் விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.