உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரம் மூலமாக ஒவ்வொரு கட்சிகளும் பெற்றுள்ள தொகை குறித்த விவரத்தை அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 31-ந்தேதிக்குள் தனது இணைய தளத்தில் விவரத்தை வெளியிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.
மேலும், தேர்தல் பத்திரம் வினியோகத்தை உடனடியாக நிறுத்தவும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்க்கட்சிகள் வரவேற்றன.
இந்த நிலையில் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க ஜூன் 30-ந்தேதி வரை காலஅவகாசம் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்துள்ளது.
ஆனால், உச்சநீதிமன்றம் அதை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரியவில்லை. இந்தியாவில் கடந்த 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரம் மூலம கட்சிகளுக்கு நிதி பெறுதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
முன்னதாக,
அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்களும், தனி நபர்களும் தேர்தல் நன்கொடை வழங்குவது வழக்கம். அதன்படி அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெற்றால், அதுபற்றி தேர்தல் கமிஷனிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற சட்டம் பின்பற்றப்பட்டு வந்தது. அதில் திருத்தம் செய்து, கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், தேர்தல் நிதி பத்திரத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
இதன்படி தனிநபர்களோ, நிறுவனங்களோ ரொக்கம் மற்றும் காசோலையாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதற்கு பதிலாக, தேர்தல் பத்திரங்களாக நன்கொடை அளிக்கலாம்.
இந்த பத்திரங்களை வெளியிட பாரத ஸ்டேட் வங்கிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. தனிநபர்களும், நிறுவனங்களும் அந்த வங்கியில் பல்வேறு மதிப்பு கொண்ட பத்திரங்களை வாங்கி, தங்களுக்கு விருப்பப்பட்ட அரசியல் கட்சிகளிடம் அளிக்கலாம். அந்த கட்சிகள், 15 நாட்களுக்குள் அவற்றை பாரத ஸ்டேட் வங்கியில் கொடுத்து, தங்களது வங்கிக்கணக்கில் பணமாக வரவு வைக்கலாம்.
இத்திட்டத்தில், யார், எவ்வளவு நன்கொடை கொடுத்தனர் என்பது வெளியே தெரியாது.
�இதனால், வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் பத்திரத் திட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் பிரமுகர் ஜெயா தாக்கூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்ற தொண்டு நிறுவனம் உள்பட 4 பேர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மத்தியில் உள்ள ஆளுங்கட்சியும், பாரத ஸ்டேட் வங்கியும் மட்டும் நன்கொடையாளர் விவரங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக அந்த மனுக்களில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களை விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது.
இந்த மனுக்கள் மீது கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதில், ஏற்கனவே பெற்ற நன்கொடைகள் மற்றும் இனிமேல் பெறப்போகும் நன்கொடைகள் பற்றிய தகவல்களை மூடி முத்திரையிட்ட உறையில் தேர்தல் கமிஷனிடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.
கடந்த அக்டோபர் மாதம் வாதங்கள் தொடங்கின. விசாரணை முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 15-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு இவ்வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அமர்வு சார்பில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 152 பக்கங்களிலும், நீதிபதி சஞ்சீவ் கன்னா 74 பக்கங்களிலும் தீர்ப்பு எழுதி இருந்தனர்.
இருப்பினும் இரண்டு தீர்ப்புகளும் ஒருமித்த தீர்ப்புகளாக இருந்தன. அமர்வு சார்பில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தீர்ப்பை வாசித்தார். தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஒரு அரசியல் கட்சி பெறும் நன்கொடை குறித்து வாக்காளர் தெரிந்து கொள்வது அவசியம். அப்போதுதான் அவர் தனது வாக்குரிமையை உறுதியான முறையில் செயல்படுத்த முடியும். ஆனால், தேர்தல் பத்திரத் திட்டம் அந்த நோக்கத்தை சிறிதளவு கூட பூர்த்தி செய்யவில்லை.
ஜனநாயக முறையிலான அரசு அமைக்க தேர்தல்முறையில் நேர்மை நிலவுவது முக்கியமானது. அதனால்தான் நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதை அரசியல் சட்டம் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு 2 காரணங்களுக்காக நன்கொடை அளிக்கப்படுகிறது. ஒன்று, அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக. இன்னொன்று, பிரதிபலன் எதிர்பார்த்து நன்கொடை அளிப்பது.
பிரதிபலன் எதிர்பார்த்து அளிக்கும் நன்கொடைகளை அரசியல் ஆதரவு நிலைப்பாடாக கருத முடியாது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதை சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் அந்த நன்கொடை, அரசியல் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.
ஆனால் அனைத்து நன்கொடைகளும் மக்கள்நலன் சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்காக கொடுக்கப்படுவது இல்லை. ஏனென்றால், நாடாளுமன்ற, சட்டசபைகளில் இடம்பெறாத கட்சிகளுக்கும் நன்கொடை அளிக்கப்படுகிறது.
தேர்தல் முறையில் வெளிப்படைத்தன்மைக்காகவும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும் தேர்தல் பத்திரம் கொண்டு வந்திருப்பதாக மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. தகவல் அறியும் உரிமையை பாதிக்காமல், கருப்பு பணத்தை ஒழிக்க மாற்று வழிகள் எத்தனையோ உள்ளன.
ஆனால் தேர்தல் பத்திர திட்டம், அரசியல் சட்டத்தின் 19(1)(ஏ) பிரிவு வழங்கும் பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கும், தகவல் அறியும் உரிமைக்கும் எதிரானதாக அமைந்துள்ளது.
நன்கொடை அளித்தவரின் ரகசியத்தை பாதுகாப்பது, ரகசிய ஓட்டுமுறை போன்றது என்ற மத்திய அரசின் வாதத்தையும் ஏற்க முடியாது. ஆளுங்கட்சி, தனிநபர்களையும், நிறுவனங்களையும் நிர்பந்தம் செய்து நன்கொடை வசூலிக்க வாய்ப்புள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லையின்றி நன்கொடை அளிப்பதற்காக கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது தன்னிச்சையானது. அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு வழங்கும் சமத்துவ உரிமையை மீறும் செயல்.
இந்த காரணங்களால், தேர்தல் பத்திர திட்டம், அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று தீர்ப்பு அளிக்கிறோம். அந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது.
தேர்தல் பத்திரத் திட்டத்துக்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், கம்பெனி சட்டம் ஆகியவற்றில் செய்யப்பட்ட சட்ட திருத்தங்களும் செல்லாதவை என்று அறிவிக்கிறோம்.
இவ்வாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.