சென்னை:
கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன் பயணிகள் ரெயிலில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. கொரோனா காலத்துக்கு பிறகு மீண்டும் ரெயில் சேவை தொடங்கியபோது அது 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. கட்டண உயர்வால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என பயணிகள் ரெயில்வே நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.
தினசரி பயணிகளுக்கான குறைந்தபட்ச ரயில் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக ரயில்வே வாரியம் குறைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்தபட்ச கட்டணம்10 ரூபாயில் இருந்து 30 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் அதை 10 ரூபாயாகக் குறைத்து பெரும் நிவாரணம் அளித்துள்ளது.
இந்நிலையில், தென்னக ரயில்வே தினசரி பயணிகளுக்கான குறைந்தபட்ச ரெயில் கட்டணத்தை குறைத்துள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும், நேற்று முதல் பழைய கட்டணத்தையே வசூலித்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாலும், கட்டணக் குறைப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.