இஸ்ரேல் ராணுவம் காசா மீது ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ்க்கு ஆதரவாக ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியார்கள் செங்கடலில் செல்லும் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து பதிலடி கொடுத்து வருகிறது. இருந்த போதிலும் நேற்று செங்கடலில் வந்து கொண்டிருந்த ஒரு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியுள்ளனர். இதனால் கப்பலில் இருந்து ஊழியர்கள் வெளியேறிய நிலையில், அந்த கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அமெரிக்கா நாடான� பெலீஸ் நாட்டின் கொடியுடன் ரூபிமார் கப்பல் சென்று கொண்டிருந்த போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சிறிய வகை வணிக கப்பலான ரூபிமாரில் இருந்த பணியாளர்கள் உடனடியான பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு போர்க்கப்பல் மற்றும் வணிக கப்பலை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கப்பலில் இருந்து பணியாளர்களை பத்திரமாக மீட்டு அருகில் உள்ள துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த கப்பல் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் பகுதியில் உள்ள உரிமையாளரால் பதிவு ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹவுதி செய்தி தொடர்பாளர் கூறுகையில் "அடையாளம் தெரியாக இங்கிலாந்து கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் கப்பல் முற்றிலுமாக மூழ்கடிக்கப்பட்டுள்ளது" என்றார்.