பாகிஸ்தானின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் (PML - N) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) அந்நாட்டில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக இரு கட்சிகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும் பதற்றம் மற்றும் அரசியல் பரபரப்புக்கு இடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பாகிஸ்தானில் பொது தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று தெரிகிறது. அந்த வரிசையில், பாகிஸ்தானில் எந்த கட்சி ஆட்சி அமைக்கப்போகிறது மற்றும் அந்நாட்டின் புதிய பிரதமர் யார் என்ற கேள்விகள் தொடர்ந்து நீடித்து வந்தன.
இந்த நிலையில், பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. இரு கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதன்படி பாகிஸ்தானின் புதிய பிரதமர் வேட்பாளராக ஷெபாஸ் ஷெரிப், அதிபர் வேட்பாளராக ஆசிப் அலி சர்தாரி அறிவிக்கப்படுவதாக பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி தெரிவித்துள்ளார்.
"பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை வைத்திருக்கின்றன," என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிலாவல் பூட்டோ தெரிவித்தார்.