ஈரோடு:
ஈரோட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
அ.தி.மு.க. பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடர்பான மேல்முறையீட்டு மனு நாளை (அதாவது இன்று) விசாரணைக்கு வருகிறது. அதன் முடிவு நீதிபதிகள் கையில் உள்ளது. எனக்கு ஜோதிடம் தெரியாது. நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவார்கள் பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்வதாக கூறி வருவது முற்றிலும் தவறு. அதுபோன்ற எண்ணமும் இல்லை, வாய்ப்பும் இல்லை. நான் ஏற்கனவே கட்சி ஒன்றுபட்டால்தான் வெற்றி அடைய முடியும் என்று சொல்லிவிட்டேன். அதை அவர்கள் கேட்பதாக இல்லை. அவர்கள் பா.ஜனதா கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டார்கள். எங்கள் நிலை பற்றி, தேர்தல் அறிவித்ததும் நல்ல முடிவை வெளியிடுவோம். தற்போது டி.டி.வி.தினகரனுடன் இணைந்து தேர்தல் பணிகளை செய்து வருகிறோம்.
சசிகலா அரசியலுக்கு வருவது குறித்து அவர்தான் அறிவிக்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தபோது பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கேட்டதற்காகவும், எங்கள் ஓட்டுகள் சிதறக்கூடாது என்பதற்காகவும் நாங்களும், டி.டி.வி.தினகரன் கட்சி வேட்பாளர்களும் வாபஸ் பெற்றோம். இரட்டை இலை சின்னத்தை கோர்ட்டு அவர்களுக்கு வழங்கியது. எனினும் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்படுகிறார். கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை. அங்கேயே தோற்கிறார்கள்.
கடந்த 1989-ம் ஆண்டு ஜெயலலிதா சேவல் சின்னத்தில் தனியாக நின்றபோது, ஈரோடு மாவட்டம் கோபி உள்பட 5 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றார். அந்தளவு புகழ்பெற்ற ஈரோடு மாவட்டத்தில் இரட்டை இலை சின்னம் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்படுகிறது என்றால் நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாங்கள் எப்படி இருக்க வேண்டும், செயல்பட வேண்டும் என மக்கள் நினைக்கிறார்களோ, அப்படி செயல்படுவோம். நாங்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணைவதற்காக தூதுவிடுவதாக கூறுவது, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.
தற்போது தனித்து நிற்பதாக கூறி வரும் எடப்படி பழனிசாமியால், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது. தன்னை கூட்டணிக்கு வரும்படி எடப்பாடி பழனிசாமி அழைத்ததாக சீமான் கூறியுள்ளார். சீமான் பொய் சொல்ல மாட்டார் என நினைக்கிறேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாக உள்ளது.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.