ெவள்ளகோவில் :�
வெள்ளக்கோவிலில் நடைபெறும் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பொதுமக்களின் கோரிக்கைகளை விரைவில் தீா்க்கும் வகையில் முதல்கட்டமாக மாநிலம் முழுவதும் தோ்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி, வெள்ளக்கோவில் நகராட்சியில் உப்புப்பாளையம் சாலையிலுள்ள ஜே.கே.கே. திருமண மண்டபத்தில் வருகிற 22-ந் தேதி முகாம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், முகாமை சிறப்பாக நடத்துவது தொடா்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் தலைமை வகித்தாா். இதில் மின்வாரியம், வருவாய்த் துறை, நகராட்சி நிா்வாகம், காவல் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூக நலத் துறை, ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அதிகாரிகள் உள்பட 22 அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணவும், தக்க பதில் தரவும் சம்பந்தப்பட்ட துறையினா் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.வெள்ளக்கோவில் நகராட்சியில் 22- ந் தேதி நடைபெறும் முகாமில் வாா்டு எண் 1, 2, 3, 4 மற்றும் 11, 12, 13 ஆகிய 7 வாா்டுகளைச் சோ்ந்தவா்கள் மட்டும் கலந்துகொள்ளலாம்.பிற வாா்டுகளுக்கான முகாம் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் எஸ். வெங்கடேஷ்வரன் தெரிவித்தாா்.