ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனத்தின் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தொடக்கத்தில் வான்வழி தாக்குதலால் காசா பகுதியை சீர்குலைத்தது. ஏவுகணை தாக்குதலால், சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்க முடியாத அவல நிலை உருவானது.
தற்போது தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை காசாவில் குறைந்தது 11,470 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 4,707 பேர் குழந்தைகள் மற்றும் மைனர்கள் ஆவார்கள். 3,155 பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், பெரும்பாலானோர் இஸ்ரேலின் வான்தாக்குதல் காரணமாக உயிரிழந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் இதுவரை உயிர்ச்தேசம் குறித்து அப்டேட் செய்து வந்தது. தற்போது இஸ்ரேல் அவர்களின் செயல்பாடுகளை முற்றிலும் முடக்கியுள்ளது. இதன்காரணமாக கடந்த வாரத்தில் இருந்து ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம் உயிர்ச்சேதம் குறித்து அப்டேட் செய்யவில்லை.
அல் ஷிபா மருத்துவமனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் நம்புகிறது. இதனால் மருத்துவமனைக்குள் புகுந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
பாலஸ்தீனத்தின் காசா முனையை, ஹமாஸ் அமைப்பினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அதிகாரம் செலுத்தி வருகின்றனர். அதேபோன்று மேற்கு கரையின் சில பகுதியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இருந்தபோதிலும் கல்வி, சுகாதார அமைச்சகம் ஆகியவை மற்றும் பாலஸ்தீனத்துடன் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது.