திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருச்சூரில் தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் நகை தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.1.80 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சூர் டவுண் கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை திருச்சூர் ரெயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் ஒரு பகுதியை கைப்பற்றினர். அவர்கள் அந்த நகைகளை குமரி மாவட்டத்தில் உள்ள நகை கடைகளுக்கு சப்ளை செய்ய வந்தபோது போலீசாரிடம் சிக்கி கொண்டனர்.
இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்ட எர்ணாகுளம் கருக்குட்டி பகுதியைச் சேர்ந்த சிஜோ ஜோஸ் என்கிற ஊத்தப்பன் (வயது 36) என்பவர் தலைமறைவானார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அங்கமாலி பகுதியில் பதுங்கியிருந்த அவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிஜோ ஜோஸ்ஸிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் திருடிய தங்க நகைகளை தமிழகத்திற்கு கொண்டு சென்று அதனை உருக்கி திருப்பூர் மற்றும் ஈரோட்டில் உள்ள கடைகளில் விற்று பணம் வாங்கியதாக தெரிவித்துள்ளார். அந்த பணத்தை கூட்டாளிகளுடன் பகிர்ந்து கொண்டதாகவும் கூறி உள்ளார். இதையடுத்து அவர் தங்கத்தை விற்ற இடங்களுக்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த நகைகளை மீட்டனர்.