இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன போராளிகளை வாழ்த்துவதாகவும், பாலஸ்தீனம் மற்றும் ஜெருசலேம் விடுதலை அடையும் வரை பாலஸ்தீன போராளிகளுக்கு துணை நிற்போம் எனவும் ஈரான் தலைவர் அயடோலா அலி காமேனியின் பாதுகாப்பு ஆலோசகர் ரஹீம் சஃபாவி கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.