Type Here to Get Search Results !

மணிப்பூர் மந்திரி வீடு மீது கையெறி குண்டு வீச்சு

மணிப்பூரில் கடந்த மே மாதம், மெய்தி இன மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. அதில் 180 பேர் பலியானார்கள். இன்னும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மணிப்பூர் மாநில ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி கேம்சந்த் யும்னம் வீடு நோக்கி கையெறி குண்டு வீசிய சம்பவம் நேற்று நடந்தது. அவரது வீடு, இம்பாலில் யும்னம் லெய்கை பகுதியில் உள்ளது. வீடு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர், திடீரென வீட்டை நோக்கி கையெறி குண்டை வீசினர்.

நல்லவேளையாக, பிரதான வாயிலுக்கு சற்று முன்பே குண்டு கீழே விழுந்து வெடித்து விட்டது. இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் தினேஷ் சந்திரதாஸ் மற்றும் ஒரு பெண் காயமடைந்தனர். வெடிகுண்டு சிதறல்கள் பட்டதால், அவர்களுக்கு கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டது.

சம்பவ இடத்தை முதல்-மந்திரி பிரேன்சிங் பார்வையிட்டார். குண்டு வீச்சுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கிடையே, மணிப்பூரில் உள்ள இரு சமூகத்தினரும் தங்கள் பகுதி மாவட்டங்களின் பெயரை மாற்றுவதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமை செயலாளர் வினீத் ஜோஷி வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநில அரசின் அனுமதியின்றி, மாவட்டங்கள், நிறுவனங்கள், இடங்கள், துணை கோட்டங்கள் ஆகியவற்றின் பெயரை சிலர் மாற்றுவதாக அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி மாற்றுவது, தற்போதைய சூழ்நிலையில் இரு சமூகங்களுக்கிடையே பிளவை உருவாக்கும்.

சட்டம்-ஒழுங்கை சீர்குலைத்து விடும். எனவே, இதுபோன்று பெயர் மாற்றுபவர்கள் மீது உரிய சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.