ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். பொதுமக்களை சுட்டுக்கொன்று, பிணைக் கைதிகளாக பிடித்து சென்றுள்ளனர். இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையே நேற்று ஐ.நா. அவசர கூட்டம் நடைபெற்றது. பூட்டிய அறைக்குள் இந்த கூட்டம் நடைபெற்றது. அப்போது ஹமாஸின் இந்த கொடூர தாக்குதலுக்கு, அனைத்து (15) உறுப்பினர் நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. ஆனால், சில நாடுகள் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கூட்டம் முடிவடைந்த பின், அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வுட் கூறுகையில் ''பெரும்பாலான சிறந்த நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. ஆனால், சில கவுன்சில் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. பொதுவாக அவர்கள் யார் என்று கூற முடியும்'' என்றார்.
ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் வாஸ்சிலி நெபன்ஜியா கூறுகையில் ''கூட்டத்தில் நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதை சொல்ல அமெரிக்க முயற்சி செய்தது. ஆனால், நாங்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பது உண்மையல்ல'' என்றார், மேலும், ''மக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். இது என்னுடைய கருத்து'' என்றார்.
சீனாவுக்கான தூதர் ''பொதுமக்கள் மீதான அனைத்து தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கிறோம்'' என்றார். ஆனால், ஹமாஸ் என்ற பெயரை அவர் உச்சரிக்கவில்லை.
இறுதியில் ஐ.நா. உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.