சென்னை:
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 10-ந் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற்றது.
2-வது முறையாக இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி, நாளை (புதன்கிழமை) வரை 2 நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இதில் இன்று காலை 9.30 மணியில் இருந்து முற்பகல் 11.45 மணி வரை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள் கூட்டம் நடக்கிறது. தொடர்ந்து நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டமும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை போலீஸ் அதிகாரிகள் கூட்டமும் நடக்கிறது.
நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியில் இருந்து முற்பகல் 11.45 மணி வரையிலும், நண்பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 1.30 மணி வரையிலும், மாலை 5.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மாவட்ட கலெக்டர்கள் கூட்டம் நடக்கிறது. இந்த 2 நாள் மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த விரிவான ஆய்வை முதலமைச்சர் மேற்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும்விதமாக அரசு பல்வேறு புதிய அறிவிப்புகளையும், திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்களை ஆய்வு செய்யவும், அவற்றை மேலும் சிறப்பாக செயல்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளும் இந்த மாநாட்டில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.