சென்னை:
தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 30 பேர் வரையில் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல சென்னையிலும் டெங்கு காய்சல் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் டெங்கு பாதிப்பு குறித்து மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மக்களிடம் நேரடியாக ஆய்வு செய்து வந்தார். மேலும், பொதுமக்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று தண்ணீர் தேங்காமல் தடுப்பது, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து தொடர் ஆலோசனை வழங்கி வந்தார். டெங்கு விழிப்புணர்வு மட்டுமின்றி சாலை அமைத்தல், மழைநீர் வடிகால் பணி என காலை முதல் இரவு வரையில் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு சென்று தொடர் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், கடந்த வாரம் திங்கட்கிழமை அவருக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டு காய்ச்சல் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதையடுத்து பரிசோதனை மேற்கொண்டதில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் கடந்த ஒரு வார காலமாக வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார். டெங்கு காய்ச்சலுக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிக்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.