இம்பால்:
மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசாருடன் ஆயிரக்கணக்கான மத்திய பாதுகாப்பு படை வீரர்களும் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மணிப்பூரில் அண்மையில் 2 மாணவர்கள் மர்ம நபர்களால் கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.
இந்நிலையில் 2 மாணவர்கள் கொலை வழக்கில் 4 பேரை சிபிஐ அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் 2 பேர் ஆண்கள். 2 பேர் பெண்கள் ஆவார்கள். இவர்கள் தலைநகர் இம்பாலில் இருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுராசந்த்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்த உள்ளது.
தற்போது 4 பேரும் கைதான சுராசந்த்பூர் தான் மணிப்பூர் வன்முறைக்கான முதல் காரணமாகும். இங்கு தான் கடந்த மே மாதம் 3ம் தேதி வன்முறை வெடித்து மாநிலம் முழுவதும் பரவியது. மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படும் இரண்டு சிறார்களும் கம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டதாக சி.பி.ஐ. ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது..
இதுதொடர்பாக மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங், தனது எக்ஸ் வலைதளத்தில், "ஒரு பழமொழி சொல்வது போல், ஒருவர் குற்றம் செய்துவிட்டு தலைமறைவாகலாம், ஆனால் அவர்கள் சட்டத்தின் நீண்ட கைகளில் இருந்து தப்ப முடியாது. அவர்கள் செய்த கொடூரமான குற்றத்திற்கு மரணதண்டனை உட்பட அதிகபட்ச தண்டனையை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.