புதுடெல்லி:
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 6-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அங்குள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்கான 'ஆபரேஷன் அஜய்' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த 212 இந்தியர்களுடன் தனி விமானம் இன்று காலை இந்தியா வந்தடைந்துள்ளது. அவர்களை மத்திய மந்திரி ராஜிவ் சந்திரசேகர் வரவேற்றார் என மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.