சென்னை:
தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகிய 4 உயிரியல் பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட உயிரியல் பூங்கா நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிப்பணிகளுக்காகவும் உயிரியல் பூங்காக்களின் நுழைவு கட்டணம் மாற்றி அமைக்கப்படுகின்றன.
அதன்படி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிக்கு இலவச நுழைவு கட்டணம் தொடர்கிறது. 5 முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 2 அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயம் செய்யப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக ரூ.20 மட்டும் வசூலிக்கப்படும்.
வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூ.115-ல் இருந்து ரூ.200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி வாகன கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேமரா ஒளிப்பதிவு கட்டணம் ரூ.500-ல் இருந்து ரூ.750 ஆக நிர்ணயம் செய்யப்படுகிறது. சக்கர நாற்காலிக்கான ரூ.25 கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. வாகன கட்டணங்கள் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிண்டி சிறுவர் பூங்காவில் நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.60 ஆகவும், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோக கேமராவுக்கு ரூ.200 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50-ம், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ கேமரா பதிவுக்கு ரூ.150 வசூலிக்கப்படுகிறது.
வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30-ம், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.