தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை, திருவண்ணாமலை, கடலூர் போன்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரியில் நேற்று 11 வயது சிறுமி உள்ளிட்ட நான்கு பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்ற வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாதிரி முடிவு வருவதற்கு முன்னதாக உயிரிழந்தார்.
கேரள மாநிலம் பசும்பாரா பகுதியை சேர்ந்த அவர், டாக்டர் படிப்பை முடித்து திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை மட்டுமல்லாமல் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களையும் டெங்கு அச்சுறுத்தி வருகிறது. கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பீகாரில் வைரஸ் காய்ச்சலால் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.