சென்னை:
தமிழகத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுபானக்கடைகளில் அதிகபட்ச சில்லரை விற்பனையை விட ரூ.10 முதல் ரூ.30 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுவதும், இதற்கு 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யும் ஊழியர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் (டிஸ்மிஸ்) என்று கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 'டாஸ்மாக்' மேலாண்மை இயக்குனர் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க தவறிய குற்றத்துக்காக கடை மேற்பார்வையாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்தாலும் பெரும்பாலான கடைகளில் 'குவார்ட்டர்' பாட்டிலுக்கு 10 ரூபாயும், 'ஆப்' பாட்டிலுக்கு 20 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக மதுப்பிரியர்கள் தங்களது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த அறிவிப்பு வெறும் சம்பிரதாயம் போன்று இல்லாமல் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பது மதுப்பிரியர்களின் கோரிக்கையாக இருக்கிறது.