மும்பை:
மகாராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவை, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து ஜால்னா மாவட்டத்தில், மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தினர்.
இந்தப் போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதில் 40-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். இதுதொடர்பாக 300க்கும் அதிகமானோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, ஜால்னா மாவட்டத்தில் நடந்து வந்த மராத்தா சமூகத்தினரின் போராட்டம் தலைநகர் மும்பையில் உள்ள பிரபல மரைன் டிரைவ் பகுதியை அடைந்தது.இதனால் அப்பகுதியில் பாதுகாப்புப் பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். மரைன் டிரைவ் பகுதியில் இருந்து கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியும் அவர்கள் செல்லவில்லை.
இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியும், சிவசேனா உத்தவ் பாலா சாகேப் தாக்கரே கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, மரைன் டிரைவ் பகுதிக்கு வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், இம்மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் மராத்தா சமூகத்தினருக்கு மத்திய அரசு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.