புதுடெல்லி:
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன் ஆராய்ச்சி பணிகளை தொடங்கி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பிரக்யான் ரோவர் நிலவில் 14 நாட்களுக்கு ஆய்வு பணியை மேற்கொள்ளும் வகையில் இஸ்ரோ அதனை உருவாக்கி இருக்கிறது. அதன்படி, ரோவர் நிலவின் மண்ணில் நகர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது எடுத்த புகைப்படம், இறங்கிய பிறகு எடுத்த புகைப்படம், ரோவர் வெளியேறும் வீடியோ உள்ளிட்டவைகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.
இதற்கிடையே, நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் பிரக்யான் ரோவர் 100 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நிலவின் தென்துருவத்தில் ஆய்வு பணிகளை வெற்றிகரமாக முடித்தது பிரக்யான் ரோவர் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
ரோவரில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டு பாதுகாப்பாக ஸ்லீப்பர் மோடில் நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த சூரிய உதயத்தில் ரோவர் மீண்டும் பணியை துவங்கும் நம்பிக்கை தெரிவித்துள்ள இஸ்ரோ, செப்டம்பர் 22-ம் தேதிக்கு பின்னர் பிரக்யான் ரோவர் மீண்டும் உயிர் பெற்று பணியைத் தொடரலாம் அல்லது நிரந்தரமாக செயலற்றுப் போகலாம். மீண்டும் எழாவிட்டால் இந்தியாவின் நிலவுத் தூதுவனாக அங்கேயே பிரக்யான் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.