திரிபோலி:
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் தாக்கியது. இதனால் கனமழை பெய்து நீர்நிலைகள் நிரம்பின. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
புயல், கனமழை, வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.
கனமழையில் மற்றும் நீர் தேங்கியதில் 2 அணைகள் திடீரென வெடித்தன. இதில் சிக்கி மக்களில் பலர் உயிரிழந்தனர். பல்வேறு பாலங்களும் சேதமடைந்து விட்டன. அணை உடைந்ததில் நீர் ஊருக்குள் புகுந்தன. இதில், பல கிராமங்களுக்குள் நீர் சூழ்ந்துள்ளது. டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், லிபியா வெள்ளத்தில் சிக்கி 18,000 முதல் 20,000 பேர் வரை இறந்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை டெர்னா நகர மேயர் வெளியிட்டுள்ளார். ஆயிரத்துக்கும் அதிகமானோரை காணவில்லை என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.