புதுடெல்லி:
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசியுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் பேசினார். இருநாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இருநாடுகளின் இணைப்பு பாலமாக அறியப்படும் ஈரானின் சபஹர் துறைமுகத்தின் முழு திறனையும் அதிகரிப்பது உள்பட இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு தலைவர்களும் தங்கள் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.
இந்தியா-ஈரான் இடையிலான உறவு இருநாட்டு மக்களிடையேயான வலுவான தொடர்பு உள்பட நெருங்கிய வரலாற்று மற்றும் நாகரீக தொடர்புகளால் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை பிரதமர் மோடி இப்ராஹிம் ரைசியிடம் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, பிரிக்ஸ் அமைப்பை விரிவுபடுத்துவது உள்பட சர்வதேச மன்றங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை பேணுவது குறித்து விவாதித்த இருநாட்டு தலைவர்களும், விரைவில் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற இருக்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது இருவரும் நேரில் சந்தித்துப் பேசுவது குறித்து ஆலோசித்தனர் என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.