Type Here to Get Search Results !

அ.தி.மு.க. மாநாட்டுக்கு பயந்து உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது தி.மு.க - எடப்பாடி பழனிசாமி

கோவை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சேலம் செல்வதற்காக சென்னையில் இருந்து நேற்று இரவு விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மதுரையில் வரும் 20-ம் தேதி பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் வியக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெறும். மாநாட்டில் சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்பார்கள்.

இந்த மாநாட்டை கண்டு பயந்து நடுங்கிப்போய், என்ன செய்வது என்று தெரியாமல் நீட் தேர்வை மையமாக வைத்து உதயநிதி ஸ்டாலின் அங்கு உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்திருக்கிறார். இது வேண்டும் என்றே திட்டமிட்டு செய்யப்படுகிறது.

சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இப்போது 2 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. 3-வது ஆண்டு நடக்கிறது. இவ்வளவு நாட்கள் என்ன முயற்சி எடுத்தார்கள்?

ஆனால் அ.தி.மு.க. நீட் தேர்வை ரத்து செய்ய அனைத்து முயற்சிகளும் எடுத்தது. அதே முயற்சியை தான் தி.மு.க.வும் எடுத்து வருகிறது. இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்தாவது தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய, ஆதரவை கேட்டு அந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பி இருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. 10 ஆண்டுகள் ஆனாலும் இவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.

மதுரை மாநாட்டுக்கு தடை கேட்டு வழக்கு தொடுப்பதற்கு என நிறைய பேர் இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கனவே காவல்துறையிடம் அனுமதி வாங்கி இருக்கிறோம் என தெரிவித்தார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.