உத்தரப் பிரதேசம் மாநிலம், மீரட்டில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மீரட்டின் சர்தானாவில் உள்ள காவல் நிலையத்திற்குள் உள்ள குற்ற ஆய்வு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 4 காவலர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அடர்த்தியான கரும் புகையின் வானத்தை நோக்கி சென்றது. இது, பல கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் தெரிந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து 6க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், காவல் நிலையத்திற்குள் உள்ள சுவிட்ச்போர்டில் இருந்த குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.
அது வேகமாக கட்டிடத்தில் பால்கனியில் பரவியது. அங்கு ஒரு கேன்டீன் உள்ளது. தீயின் தீவிரம் காரணமாக கேன்டீனில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
பின்னர், தீவிர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ரோஹித் சிங் சஜ்வான் கூறியதாவது:-
தீ அணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தீயை அணைக்க முயன்றபோது தங்கள் அதிகாரிகள் 4 பேருக்கு கைகள் மற்றும் முகங்களில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் குறைந்த அளவில் காயம் அடைந்தவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.