புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.
சிறுமி படுகொலைக்கு நீதிக்கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி மாநில அதிமுகவும், இந்தியா கூட்டணியும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை முதல் புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. முழு அடைப்பு காரணமாக பேருந்து நிலையம் வந்த மக்கள், தாங்கள் செல்ல இருக்கும் இடத்திற்கு பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
முழு அடைப்பு போராட்டத்தால் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாது, மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுதலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சிறுமி படுகொலைக்கு நாடு முழுவதும் இருந்து பலத்த எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், சிறப்பு விசாரணை நீதிமன்றம் அமைத்து ஒருவாரத்திற்குள் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதிகிடைக்க ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரு குற்றவாளிகளும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.