நாடு முழுக்க பாராளுமன்ற தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே அரசியல் தலைவர்கள் கட்சி மாறும் படலமும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
அந்த வரிசையில், பா.ஜ.க. கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், மேலவை உறுப்பினருமான தேஜஸ்வினி கவுடா காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். கர்நாடகா மாநில தலைமையகத்தில் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், மாநில தலைவர் பவன் கேரா முன்னிலையில், தேஜஸ்வினி கவுடா காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
"அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு பா.ஜ.க. மதிப்பளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சி வெறும் வார்த்தைகளோடு மட்டுமின்றி, செயல் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 இடங்களில் 23 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்," என்று தேஜஸ்வினி கவுடா தெரிவித்தார்.