சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மதுபான விடுதியின் முதல் தளத்தில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. விபத்து நடந்த சமயத்தில் மதுபான விடுதியில் ஏராளமானோர் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த மூவரும் மதுபான விடுதியில் பணியாற்றி வந்தவர்கள் என்றும் அவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் மற்ற இருவர் மணிப்பூரை சேர்ந்தர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மதுபான விடுதிக்கு அருகே மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் விபத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதனிடையே விபத்து களத்தில் மீட்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுபான விடுதி விபத்துக்கு மெட்ரோ ரெயில் பணிகள் காரணம் இல்லை என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு 240 அடி தொலைவில் தான் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்து நடந்த பகுதியை சுற்றியுள்ள இடங்களில் எந்த அதிர்வும் கண்டறியப்படவில்லை.
மதுபான விடுதி மேற்கூரை இடிந்து விழுந்தது தொடர்பாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு மெட்ரோ ரெயில் நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.