Type Here to Get Search Results !

தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்க மத்திய அரசுக்கு மனமில்லை: கனிமொழி எம்.பி. தாக்கு

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 'எல்லோருக்கும் எல்லாம்' மற்றும் தமிழக அரசின் 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கருணாநிதி முதலமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது. ஏனெனில், அவர் இலவச மின்சாரத்தை கொண்டு வரவில்லை என்றால் எங்களால் தொடர்ந்து விவசாயம் செய்திருக்க முடியாது என விவசாயிகள் சொல்லும் அளவிற்கு விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

அதுமட்டுமின்றி 7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை அவர் ரத்து செய்தார். இங்கே ஒடுக்கப்பட்டு நின்ற மக்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் கலைஞர் கருணாநிதி பாடுபட்டார். கலைஞரின் ஆட்சியின் நீட்சியாக தற்போது ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயத்திற்காக தனி பட்ஜெட்டை கொண்டுவந்தார்.

இந்த நாட்டில் விவசாயம்தான் மிகப்பெரிய தொழில். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு வந்தபோது கடைகள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்ட நிலையில், விவசாயத்தை மட்டும்தான் யாராலும் நிறுத்தச் சொல்ல முடியவில்லை.

தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிடம் இருந்து ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசு, திரும்பக் கொடுப்பதற்கு மனசு இல்லை.

நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாலும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தென்மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக முதல்வர்தான் உதவிக்கரம் நீட்டினார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை என கடுமையாக சாடினார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.