Type Here to Get Search Results !

தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்: திருமாவளவன் திட்டவட்டம்

சென்னை சேத்துப்பட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இடஒதுக்கீடு பிரச்சனையில் சுமுகமான முறையில் தீர்வை காண்போம். அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முடிவுகள் இருக்கும்.

அ.தி.மு.க. தங்களின் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து முதலில் ஒரு கூட்டணியை உருவாக்கட்டும். தங்களின் நட்பு கட்சிகளான பா.ம.க. உள்ளிட்ட பிற கட்சிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீடு செய்வதில் ஆர்வம் காட்டாமல் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது அவர்களின் உள்நோக்கம் என்ன என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கிறது.

அதனை எங்கள் மீது உள்ள கரிசனம் என்று புரிந்து கொண்டாலும், அது உண்மைதான் என்று ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் அணுகு முறையில் உள்நோக்கம் இருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மிகத்தெளிவாக இருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் 3 தொகுதிகளை கேட்கிறோம். தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அது வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆனாலும் தி.மு.க. கூட்டணியில், இந்தியா கூட்டணியில் பயணிப்போம் என்பதுதான் உண்மை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ள அணி என்பது 10 கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி. விடுதலை சிறுத்தைகள் கட்சியை எப்படி அரவணைக்கிறார்களோ! அப்படி ஒவ்வொரு கட்சிகளையும், அவர்களின் தேவையை உணர்ந்து அரவணைக்க வேண்டிய பொறுப்பில் தி.மு.க. இருக்கிறது என்பதையும் நாங்கள் அறிவோம்.

ஒரு கூட்டணியின் அங்கமாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அந்த கூட்டணியின் நலன்களை பற்றி கவலைப்படாமல் ஒரு முடிவை எடுக்க முடியாது. எங்கள் நலன் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கூட்டணியின் நலன்களும் முக்கியமானது. எங்கள் வெற்றி எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு கூட்டணி வெற்றியும் முக்கியம். அந்த வயைில் ஒரு பரஸ்பர புரிதலோடுதான் எங்கள் முயற்சிகளும், பேச்சுவார்த்தையும் இருக்கும்.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.