அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள படப்ஸ்கோ ஆற்றில் இருந்த இரும்பு பாலம் மீது சரக்கு கப்பல் மோதியதில், அந்த பாலம் முழுமையாக இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தில் பழுதுநீக்கும் பணியில் ஈடுபட்டு வந்த எட்டு தொழிலாளர்கள் ஆற்றில் விழுந்தனர்.
இந்தநிலையில், இடிந்து விழுந்த பால்டிமோர் பாலத்தின் கழிவுகளை பணியாளர்கள் முதல்முறையாக வெளியேற்றி உள்ளனர். இதில் 200 டன் மதிக்கத்தக்க பாலத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆற்றில் சரிந்து விழுந்த பாலத்தை அதிநவீன உபகரணங்கள் கொண்டு சிறுசிறு பாகங்களாக வெட்டி எடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
பாலத்தை முழுமையாக மீட்க முயற்சிக்கும் போது, அதில் சிக்கி உயிரிழந்த அனைவரின் உடல்களையும் மீட்க வாய்ப்புகள் அதிகம் ஆகும். பாலம் சரிந்து விழுந்த விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
"பாலம் சரிந்து விழுந்ததில் இருந்து முதலத் முறையாக அதன் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாலத்தின் மேற்பரப்பை வெட்டி எடுக்கும் பணிகள் முழுமை பெற்றன. இதில் மீட்கப்பட்ட பாகத்தின் எடை 200 டன்கள் வரை இருக்கும்," என்று அமெரிக்க கடற்படை செய்தி தொடர்பாளர் கிம்பர்லி ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.