கர்நாடக சட்டசபையில் போக்குவரத்து மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மந்திரி ராமலிங்கரெட்டி, கர்நாடக இந்து வழிபாட்டு நிறுவனங்கள் அதாவது இந்து கோவில்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதில் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடி வரையிலான கோவில் வருமானத்தில் 5 சதவீதத்தையும், ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இருந்தால் அதில் 10 சதவீதத்தையும் தார்மிக பரிஷத்துக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசு கோவில் வருவாயை வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக அக்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதற்கு ஆளும் காங்கிரஸ் தலைவர்களும் உரிய பதிலடி கொடுத்தனர்.
இந்த நிலையில் கர்நாடக மேல்-சபையில் நேற்று மந்திரி ராமலிங்கரெட்டி, இந்து வழிபாட்டு நிறுவனங்கள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மீது பேசிய பா.ஜனதா உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
இறுதியில் மேலவை தலைவர் இருக்கையில் இருந்த துணைத்தலைவர் பிரானேஷ், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாவை நிறைவேற்ற முயன்றார். மசோதாவுக்கு எதிராக அதிக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர்.
இதையடுத்து மசோதாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு தெரிவிப்போரின் எண்ணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் மசோதாவுக்கு 7 பேரும், எதிராக 18 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து அந்த மசோதா தோல்வி அடைந்தது. இது ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேல்-சபையில் காங்கிரசுக்கு பெரும்பான்மை பலம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மசோதா தோல்வி அடைந்ததும் பா.ஜனதா உறுப்பினர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். பதிலுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெய் பீம் என்று முழக்கமிட்டனர். இதனால் சபையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேல்-சபையில் மசோதா தோல்வியடைந்தது சித்தராமையாக அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.