Type Here to Get Search Results !

சந்தேஷ்காளி விவகாரம்: முக்கிய குற்றவாளி ஷேக் ஷாஜகான் கைது

மேற்கு வங்காள மாநிலம் சந்தேஷ்காளியில் பெண்களுக்கு எதிராக ஷேக் ஷாஜகான் பாலியல் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகவும், சொத்துகளை அபகரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் பெண்கள் குற்றம் சாட்டினர்.

ஷேக் ஷாஜகானுக்கு எதிராக பெண்கள் தெருக்களில் ஆயுதங்களுடன் போராட தொடங்கினர். இதனால் இந்திய அளவில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் முக்கிய குற்றவாளியான ஷேக் ஷாஜகான் போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவானார்.

மேற்கு வங்காளத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் மம்தா பானர்ஜி ஷேக் ஷாஜகானை பாதுகாப்பதாக எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா குற்றம் சாட்டியது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அந்த குற்றச்சாட்டை மறுத்தது.

தலைமைறைவான ஷேக் ஷாஜகானை போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று நள்ளிரவு வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் வைத்து மேற்கு வங்காள காவல்துறையின் சிறப்பு குழு கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாக வந்து புகார் அளிக்கலாம் அரசு சார்பில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டது. அதேவேளையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆளுநர் மாளிகையில் தஞ்சம் அடையலாம் என ஆளுநர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் ஷேக் ஷாஜகான் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க நபராக விளங்கிய ஷேக் ஷாஜகான் கடந்த 55 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.