மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. 3-வது முறையாக வெற்றி பெற்று பிரதமராக வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் 370 இடங்களை பிடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறது பா.ஜனதா.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக வேட்பாளர்களை பட்டியலை வெளியிட பா.ஜனதா தீர்மானத்தித்துள்ளது. முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிரதமர் தலைமையிலான பா.ஜனதாவின் மத்திய தேர்தல் கமிட்டி நேற்று முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனை கூட்டம் நள்ளிரவு வரை நீடித்துள்ளது. இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனைக் கூட்டம் சுமார் நான்கரை மணி நேரம் நடைபெற்றுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா, ஜே.பி. நட்டா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பா.ஜனதாவின் மத்திய தேர்தல் குழு வேட்பாளர்கள் பட்டியல் குறித்து அலுவலகத்தில் ஆராய்ந்து வந்த நிலையில், பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் அமித் ஷா மற்றும் நட்டாவுடன் தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேவந்திர பட்நாவிஸ், பிரகாஷ் ஜவடேகர், மன்சுக் மாண்டவியா, புஷ்கர் தாமி, பிரமோத் சவாந்த், பூபேந்திர யாத், ஜோதிராதித்யா சிந்தியா, கேஷவ் மவுரியா யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கேரளா, தெலுங்கானா, ராஜஸ்தான், கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பாளர்களை அறிவிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
மாநிலத் தலைவர்களுடன் யாரை வேட்பாளராக நிறுத்தில் வெற்றி உறுதி செய்யப்படும் என்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்கள் தெரிவிக்கும் பெயரை குறித்து வைத்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பஞ்சாப், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் வேட்பாளர் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்களிலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 10-ந்தேதிக்குள் 50 சதவீத வேட்பாளர்களை அறிவித்துவிடலாம் என பா.ஜனதா நம்புகிறது. கடந்த 2019-ல் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே 164 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அந்த வகையில் தற்போது வெளியிட விரும்புகிறது.
வெற்றி பெறக்கூடிய ஆய்வு என்ற பா.ஜனதா கட்சி இதை கூறுகிறது. ஏனென்றால் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் கட்சி தீவிரம் காட்டி வருவதால் இப்படி அழைக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி இன்னும் இட ஒதுக்கீடு பேச்சுவார்த்தையை முடிக்காத நிலையில், முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உளவியல் ரீதியாக நெருக்கடியை கொடுக்க முடியும் பா.ஜனதா எதிர்பார்க்கிறது.
மாநிலங்களவை எம்.பி.யாக மீண்டு வாய்ப்பு வழங்கப்படதாக சில மத்திய மந்திரிகள் பெயர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறலாம் எனக் கூறப்படுகிறது.