காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, கடந்த 2004-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.
கடைசியாக, கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலிலும் ரேபரேலியில் வெற்றி பெற்று எம்.பி.யாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் மக்களவை தேர்தல் வரும் நிலையில், சோனியாகாந்தி மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாகும் மாநிலங்களவை இடத்துக்கு அவர் போட்டியிடுகிறார். இதனால், மக்களவை தேர்தலில் அவர் போட்டியிட மாட்டார் என்பது உறுதியானது.
இந்நிலையில், தனது ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு சோனியாகாந்தி இந்தியில் எழுதப்பட்ட ஒரு உருக்கமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் இன்று அடைந்திருக்கும் நிலைக்கு காரணம் நீங்கள்தான் என்பதை பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நம்பிக்கையை கவுரவிக்க என்னால் இயன்ற அளவுக்கு செயல்பட்டுள்ளேன்.
தற்போது முதுமை மற்றும் உடல்நல பிரச்சினைகளால் வருகிற மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன். இந்த முடிவால், உங்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு இருக்காது. இருப்பினும், எனது இதயமும், ஆன்மாவும் எப்போதும் உங்களுடனே இருக்கும்.
கடந்த காலத்தை போலவே எதிர்காலத்தில் எனக்கும், என் குடும்பத்துக்கும் ஆதரவாக இருப்பீர்கள் என்று எனக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரேபரேலி தொகுதியில் சோனியாகாந்தியின் மகளும், காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.