Type Here to Get Search Results !

சந்தேஷ்காளியில் 144 தடை உத்தரவு எங்களுக்கு மட்டும்தான்: பா.ஜனதா தலைவர் குற்றச்சாட்டு

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டம் சந்தேஷ்காளியில் பழங்குடியின பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், பழங்குடியினரின் நிலங்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்பட்டதாகவும், மத்திய மற்றும் மாநில நலத்திட்டங்கள் மூலம் பெறும் பணத்தை முறைகேடாக பறித்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் ஷேக் ஷாஜகான் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இவர் தலைமறைவாக உள்ளார். அவரையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்யக்கோரி வன்முறை சம்பவங்கள் நடந்தன. பெண்கள் ஆயுதங்களுடன் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியதால் விவகாரம் தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

சந்தேஷ்காளி சென்று பாதிக்கப்பட்ட பெண்களை சந்திக்க பா.ஜனதா தலைவர் சுகந்தா மஜும்தார் முடிவு செய்தார். வன்முறையை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி பா.ஜதனா தலைவர் சுகந்தா மஜும்தார் அங்கு செல்ல முயன்றார். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். பிறகு ஜாமின் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியபின் அவரை விடுவித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர் கவர்னரை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

சந்தேஷ்காளில் நடந்த முழு சம்பவம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் அளித்தேன். அதை கேட்டு கவர்னர் அதிர்ச்சி அடைந்தார். ஜனநாயகத்தில் இதுபோன்ற சம்பவத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. பா.ஜனதாவிற்கு எதிராக மட்டும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. ஏனென்றால் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. 50 பேருடன் அப்பகுதியில் சுற்றி வருகிறார். இது பா.ஜனதா தலைவருக்கும், தொண்டர்களுக்கும் மட்டும் பொருந்தும் வகையிலான 144 தடை உத்தரவின் ஒரு பகுதி.

ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது சகோதரர்கள் ஜமின்தார் போன்று நடந்து, மக்களை துன்புறுத்துகிறார்கள். மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ், இந்த விவகாரம் வெளியில் தெரியாத வண்ணம் குரலை ஒடுக்குகிறது. தற்போது பெண்கள் அவர்களுடைய குரலை எழுப்பியுள்ளனர். அனைத்து விவகாரத்திலும் ஆளுநர் கவனம் செலுத்துகிறார். உள்துறை அமைச்சகத்திற்கு இது தொடர்பாக ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்" என்றார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.