மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தின் வாசிம் மாவட்டத்தில் சார்சி கிராமத்தில் வசித்து வருபவர் ராம் ஹரி. இவரின் மனைவி கீதாபாய். வீட்டில் வளர்க்கும் எருமை மாட்டுக்கு இவர் தான் உணவு அளிப்பார்.
வழக்கம் போல் கீதாபாய் எருமை மாட்டுக்கு உணவு அளிக்கும்போது, தாலி செயின் கழன்று உணவுடன் விழுந்துள்ளது. அப்போது உணவோடு உணவாக தாலி செயினை விழுங்கியது எருமை மாடு.
சில மணி நேரங்களுக்குப் பிறகுதான் செயின் காணாமல் போனதை உணர்ந்த அவர், செயினை எருமை மாடு உட்கொண்டதை அறிந்துள்ளார். உடனடியாக அவர் இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த மருத்துவ குழுவினர், எருமை மாட்டின் வயிற்றை மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதித்த போது, உள்ளே தங்க நகை இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் தங்க நகையை எருமை மாட்டின் வயிற்றிலிருந்து மருத்துவ குழுவினர் மீட்டனர். தொடர்ந்து எருமை மாட்டுக்கு 63 தையல்கள் போடப்பட்டது.
எருமை மாடு, தங்கச் சங்கிலியை விழுங்கி அது மீண்டும் மீட்கப்பட்ட தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எருமை மாட்டை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.